Showing posts with label புனைவு. Show all posts
Showing posts with label புனைவு. Show all posts

01 April 2023

கதாபாத்திரம் கட்டிய சந்தா

இன்னும் சில வாரங்கள் கழித்து வரவிருக்கிற பாத்திரம், ஆபீஸ் நாவலுக்கு ஆண்டு சந்தா கட்டியிருக்கிறது 

24 March 2023

ஆபீஸ் அத்தியாயம் 42 உட்காருதல்

இருந்த பணத்தில் சிக்கணமாக பிரெட் ஆம்லேட்டுடன் மதிய உணவை முடித்துக்கொள்வதற்காக பல்கலைக் கழகத்திற்கு பஸ் பிடித்தவன், பெல்ஸ் ரோடு கனையாழி ஆபீஸ் கண்ணில்பட்டதும் படக்கென இறங்கிக்கொண்டான். சும்மா உள்ளே போனவன், குனிந்து எழுதிக்கொண்டிருந்த  தி. ஜாவைப் பார்க்க நேர்ந்ததில் மெய்சிலிர்க்க,பரவசப்பட்டுப்போய் வாயில் சத்தம் வராமல், அறை வாயிலில் நின்றபடியே வணக்கம் வைத்தான். நிழலாடியதில், நிமிர்ந்து பார்த்தவர், 

'நீங்க?' என்றார். 

03 March 2023

ஆபீஸ் அத்தியாயம் 30 நாடகம்

ஈரோடுக்கு அனுப்ச்சாச்சு. இண்டுவிஜுவல் காப்பிய வாங்கிக்கங்கோ என்றபடி, டேபிளில் இருந்த தடி ஃபைலில் இருந்து ஒரு பேப்பரை எடுத்து அவனிடம் கொடுத்து, அதிலேயே இருந்த ஆபீஸ் காப்பியில் கையெழுத்தைப் போடச்சொல்லி ஃபைலை அவனுக்காய் திருப்பினார். 

ஆபீஸ் அத்தியாயம் 29 வந்துடு

வரிசையில் நின்றிருக்கையில் சென்னை ஃபில்ம் சொசைட்டி சிவக்குமார் தென்படவும் ஹலோ என்றான்


என்ன, எதோ கேள்விப்பட்டனே என்றான் அவன். கேள்வியில் இருந்த லேசான கிண்டல் முகத்திலும் இருந்தது.


என்ன கேள்விப்பட்ட... 


வேலைய ரிசைன் பண்ணிட்டு... 

ஆபீஸ் அத்தியாயம் 28 வேட்கையும் பிரசாதமும்

அதுவரை, 'விட்டுவிட்டால் என்ன' என்கிற எண்ணமாக இருந்தது, மெல்ல விட்டுவிடுவது என்கிற முடிவாக அவனுக்குள் உறுதியாகத் திரளத்தொடங்கியிருந்தது. நான்கையும் யோசித்து முடிவு எடுப்பதாகத்தான் நாம் நம்புகிறோம். ஆனால் நம் மனமானது, நமக்கே தெரியாமல், சாதகமான காரணங்களையாகத் தேடித்தேடித் திரட்டி, எடுத்த முடிவை நியாயப்படுத்திக்கொள்ளவே பார்க்கிறது

ஆபீஸ் அத்தியாயம் 27 கரையும் கடல்

அப்பா தவறிப்போய் கொஞ்சநாள் ஆகியிருந்த சமயம். அம்மாவுடன் ஏதோ அர்த்தமற்ற வாய்ச் சண்டையில் ஆரம்பித்தது, சாப்பாட்டுத் தட்டு பறந்ததில் போய் முடிந்திருந்தது. வீட்டில் இருக்கவே பிடிக்காமல் கிளம்பி, பெஸண்ட்நகரில் இருந்து, இரண்டு பஸ் மாறி இங்கேதான் வந்தான். இதே போலத்தான் நின்று அப்போதும் கடலைப் பார்த்துக்கொண்டிருந்தான். ஆனால், முன்னிரவு என்பதால் அப்போது எதிரே தெரிந்த கடற்கரையில் காக்காய் இல்லை.

ஆபீஸ் அத்தியாயம் 26 விதி

பகீலென்றது. குசு பெறாத விஷயம், கலெக்டர் வரை போய்விட்டதா. பாபுவின் முகத்தைப் பார்க்ககவலை கலக்கமானது. 

சாவித்ரியிடம் சொல்லலாமா என்று தோன்றியது. அவன் யோசிப்பதைப் பார்த்து,

நேரா போய் கலெக்டரைப் பாரு சார். நல்ல மனுசன். தெரியாம நடந்துருச்சினு சொல்லு. திட்டிட்டு விட்டுருவாரு என்றான் பாபு. 

02 March 2023

ஆபீஸ் அத்தியாயம் 25 ஏன்

தூரத்தில் போலீஸைப் பார்த்ததும் போலீஸ் நம்மைப் பார்க்காவிட்டாலும் விளக்கில்லாத சைக்கிளை வீட்டிலிருந்தே தள்ளிக்கொண்டு வருவதைப் போலஅவர் முன்னால் இறங்கிச் செல்வதில்லையா அதைப்போல், போலீஸுக்காக இறங்காததைப்போல நாமும், நம்மைத் தாண்டினால் ஏறி ஓட்டிக்கொண்டுதான் செல்லப்போகிறான் என்று நன்றாகவே தெரிந்தாலும் நமக்காக இறங்கியிருக்கிறானே அந்த மரியாதையே போதும் என்று போலீஸ்காரரும் பரஸ்பரம் திருப்திபட்டுக்கொள்வதைப் போல ஏசியும் அவனும் சமாதானத்தில் இருப்பதாக எண்ணி தனக்குத்தானே சிரித்துக் கொண்டான்.

ஆபீஸ் அத்தியாயம் 24 எப்படி

இலக்கிய அபிப்ராயங்கள் எழுத்தாளர்கள் பற்றிய அக்கப்போர்கள் என – எவளாவது பணக்கார கெழவி கெடைச்சா சீக்கிரம் கட்டிக்கிட்டு செட்டில் ஆகிடணும்சிகரெட் பிடிக்க வசதியா இருக்குனு இண்ட்டலெக்சுவல் பொம்பளைங்க க்ரியாவுக்கு வந்துடறாங்க என்பதைப் போலவேலை பார்க்கிற இடத்தைக் கூட விட்டுவைக்காமல் எகத்தாளமாக பேசி எல்லாவற்றையும் அனாயாசமாக அணுகுகிறவராக இருந்த திலீப்குமார், க்ரியாவில் பில் போடுவது முதல் மேற்பார்வை பார்ப்பதுவரை எல்லாமுமாக இருந்தார்.

ஆபீஸ் அத்தியாயம் 23 வாழ்வது எப்படி

அம்மா எரிச்சலூட்டுபவளாகத் தொடங்கியதுஅவனுக்கு அறிவு பிடிபடத்தொடங்கியதிலிருந்து இருக்கலாம் என்று தோன்றியது. அறிவுக்கும் அவளுக்கும் எப்போதுமே சம்பந்தம் இருந்ததில்லை. அப்பாவுக்கு அவளிடம் வந்த எரிச்சலுக்குக் காரணம் கூட அவளது மடத்தனமாகத்தான் இருக்கவேண்டும் என்று, அவர் போன பிறகு அதிகமாகத் தோன்றத் தொடங்கிற்று. 

ஆபீஸ் அத்தியாயம் 22 கெளரவமாக வாழ்வது எப்படி

பரீக்‌ஷாவில் இருந்தது என்னவோ ஒன்றரை வருடம்தான் என்றாலும் சுற்றிலும் இலக்கியவாதிகளாக இருந்ததாலோ என்னவோஉள்ளே வரும்போதுமு. மேத்தா முற்போக்கு என கல்லூரி கவிதைப் போட்டிகளின் விட்டகுறை தொட்டகுறையாக ஊசலாடிக்கொண்டிருந்தவன்பரீக்‌ஷாவை விட்டு வெளியேறும்போது  தீவிர இலக்கியம் சினிமா என்று முழுவதுமாகத் தலைகுப்புறக் குதித்துவிட்டிருந்தான்.

ஆபீஸ் அத்தியாயம் 21 இலக்கியமாகவே வாழ்வது எப்படி?

அந்தப் பழக்கம் எப்போது ஆரம்பித்தது என்று அவனுக்கே சரியாகத் தெரியவில்லை. எழுத ஆரம்பித்ததில் இருந்துதான் இருக்கவேண்டும். 

01 March 2023

உலகச் சிறுகதைகள் 11 கெய்ட் ஷோப்பின்

வரப்போகும் அந்த வருடங்களில் அவள் யாருக்காகவும் வாழ வேண்டியதில்லை; தனக்காகவே அவள் வாழப்போகிறாள். கண்மூடித்தனமான வற்புறுத்தலால் அவளுடைய விருப்பத்தை வளைத்துவிடும் சக்திவாய்ந்த ஆசைகொண்ட வேறொரு மனம் இருக்கப் போவதில்லை; சக உயிரினத்தின்மீது தன்னுடைய தனிப்பட்ட ஆசையைச் சுமத்த தங்களுக்கு உரிமை உள்ளது என்று ஆண்களும் பெண்களும் நம்புவதற்குக் காரணமாக இருப்பது அந்த வற்புறுத்தல்தான். அந்தச் செயலின் நோக்கம் அன்பு நிறைந்ததா, குரூரமானதா என்பது ஒரு பொருட்டில்லாமல் நிச்சயம் அது ஒரு குற்றமே என்பதை அந்தக் குறுகிய கணத்தில் உண்டான ஞான வெளிச்சத்தில் அவளால் பார்க்கமுடிந்தது.

03 March 2018

வழிகாட்டி - தி. ஜானகிராமன்

கு. ப. ராஜகோபாலன் காலமானது 1944-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 27-ம் தேதி. கடைசி ஒரு வார காலம் என் மனதில் இருள் சூழ்ந்து கிடந்தது. அவருடைய உயிர்பற்றி ஒரு அச்சமும், ஏக்கமும், வயிற்றில் நம நமவென்ற கலக்கமும் சுமந்து அழுத்திக் கொண்டிருந்த ஞாபகம். என் தகப்பனார், மனைவி – இருவரிடமும் அடிக்கடி நான் அவரைப் பற்றி ஏதாவது சொல்லிப் புலம்பிக் கொண்டிருந்த ஞாபகம். ‘கரிச்சான் குஞ்சுவும்’ என்னோடு சேர்ந்து அழுது கொண்டிருந்தான். அவன் என்னைவிட உணர்ச்சி வசப்படுகிறவன். இந்த பயமும் கரையலும் ஏப்ரல் 21-ம் தேதிக்குப் பிறகு என்று நினைக்கிறேன். ராஜகோபாலன் கிடந்த கிடையும், பட்ட சித்திரவதையும் ஒரு அநிச்சயத்தையும், கலவரத்தையும் எங்கள் இருவர் மனதிலும் மூட்டியிருந்தன. நாங்களும் கையாலாகாமல் தவித்த ஞாபகம். அவருக்கு முழங்காலுக்குக்கீழ், ஆடுசதை கல் சதையாக இறுகிக் கிடந்தது. கடுகுப் பத்துப் போட்டிருந்தார்கள். அந்த எரிச்சல் வேறு. காலுக்குள், வெளியே – இரண்டு பக்கமும் எரிச்சல். அது பையப்பைய உயிரை அரித்துக் கொண்டிருந்தது என்று கடைசி மூன்று நாட்களுக்குமுன் தான் சந்தேகம் வந்தது எங்களுக்கு. ஏற்கனவே, மெலிந்து, துவண்ட அந்தப் பூஞ்சை உடல் எப்படி இந்த வதையைத் தாங்குகிறது, இன்னும் எத்தனை நாள் தாங்கும் என்று நாங்கள் கிலிக்கு ஆளாகி, அவரைவிட்டு அகன்று அப்பால் வந்தபோதெல்லாம், அவரைப் பற்றியே புலம்பிக் கொண்டிருந்தோம்.

03 November 2012

ஷீனாவும் நாணாவும்



பாட்டக் கேட்டேளோ! என்னமா பாடியிருக்கா ரெண்டுபேரும். ஷபாஷ்!

18 August 2012

எமூர்

அன்று மாலை கிண்டி ரயில் நிலையத்தில் உயரதிகாரியை சந்திக்கவேண்டி இருந்தது. தூரல் மழையாகுமுன் வண்டியை விரட்டிக்க்கொண்டு சென்றேன். முதற்பார்வைக்கே நிழலுருவங்களாய் வரிசை நீண்டிருப்பது தெரிந்தது. நடைமேடை சீட்டு வாங்க எப்படியும் ஒரு மணிநேரம் ஆகும்போல் தோன்றவே வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு, பாலத்தின் படிக்கட்டுகளில் ஏறினேன். நடைமேடைக்கு இறங்காமல், பறந்துகொண்டிருந்த பயணிகளுக்கு இடைஞ்சலின்றி நடுவழியிலேயே சுவரோரம் நின்றுகொண்டேன். மண்ணின் மைந்தர்தம் வாய்த்திறம் வெள்ளை டைல்ஸ் சுவரை ஓவியங்களாய்  அலங்கரித்திருந்தது. புட்டத்தில் ஓவிய நகல் பதித்துவிடாதிருக்க சிறப்பு கவனம் எடுத்துக்கொள்ள நேர்ந்ததில், பரபரத்துக்கொண்டிருந்தவர்களின் முழங்கைமுட்டிகள் தொப்பையைப் பதம்பார்த்துக்கொண்டிருந்தன. இனிபொறுப்பதில்லை தொப்பையைக் குறைக்க ஏதாவது செய்தாக வேண்டும். குறைந்தபட்சம் பேப்பரையாவது அந்த காலம்போல் தரையில் குந்தி உட்கார்ந்து படிக்க வேண்டும்.