Showing posts with label தி. ஜானகிராமன். Show all posts
Showing posts with label தி. ஜானகிராமன். Show all posts

29 March 2023

ஆபீஸ் அத்தியாயம் 43 அசாதாரண அசடு

ஜானகிராமன் எல்லாம் வேலை பார்த்து ஓய்வுபெற்ற பின்பும் எழுதிக்கொண்டுதானே இருந்தார். அவரை விட எழுத்தில் சாதித்தவர் என்று எவ்வளவு பேரைச் சொல்லிவிடமுடியும் என்றும் ஒருபுறம் தோன்றிற்று. ஆபீசில் வேலைபார்த்துக்கொண்டே எழுதுகிறார் என்பதால்,ஞாயிற்றுக்கிழமை எழுத்தாளர் என்று தி.ஜாவை கிண்டலடித்த, முழுநேர லெளட்ஸ்பீக்கரான ஜெயகாந்தனைவிட கலாரீதியாக ஜானகிராமன் சாதித்தது ஒப்பிடமுடியாத உயரமல்லவா.

24 March 2023

ஆபீஸ் அத்தியாயம் 42 உட்காருதல்

இருந்த பணத்தில் சிக்கணமாக பிரெட் ஆம்லேட்டுடன் மதிய உணவை முடித்துக்கொள்வதற்காக பல்கலைக் கழகத்திற்கு பஸ் பிடித்தவன், பெல்ஸ் ரோடு கனையாழி ஆபீஸ் கண்ணில்பட்டதும் படக்கென இறங்கிக்கொண்டான். சும்மா உள்ளே போனவன், குனிந்து எழுதிக்கொண்டிருந்த  தி. ஜாவைப் பார்க்க நேர்ந்ததில் மெய்சிலிர்க்க,பரவசப்பட்டுப்போய் வாயில் சத்தம் வராமல், அறை வாயிலில் நின்றபடியே வணக்கம் வைத்தான். நிழலாடியதில், நிமிர்ந்து பார்த்தவர், 

'நீங்க?' என்றார். 

03 March 2018

வழிகாட்டி - தி. ஜானகிராமன்

கு. ப. ராஜகோபாலன் காலமானது 1944-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 27-ம் தேதி. கடைசி ஒரு வார காலம் என் மனதில் இருள் சூழ்ந்து கிடந்தது. அவருடைய உயிர்பற்றி ஒரு அச்சமும், ஏக்கமும், வயிற்றில் நம நமவென்ற கலக்கமும் சுமந்து அழுத்திக் கொண்டிருந்த ஞாபகம். என் தகப்பனார், மனைவி – இருவரிடமும் அடிக்கடி நான் அவரைப் பற்றி ஏதாவது சொல்லிப் புலம்பிக் கொண்டிருந்த ஞாபகம். ‘கரிச்சான் குஞ்சுவும்’ என்னோடு சேர்ந்து அழுது கொண்டிருந்தான். அவன் என்னைவிட உணர்ச்சி வசப்படுகிறவன். இந்த பயமும் கரையலும் ஏப்ரல் 21-ம் தேதிக்குப் பிறகு என்று நினைக்கிறேன். ராஜகோபாலன் கிடந்த கிடையும், பட்ட சித்திரவதையும் ஒரு அநிச்சயத்தையும், கலவரத்தையும் எங்கள் இருவர் மனதிலும் மூட்டியிருந்தன. நாங்களும் கையாலாகாமல் தவித்த ஞாபகம். அவருக்கு முழங்காலுக்குக்கீழ், ஆடுசதை கல் சதையாக இறுகிக் கிடந்தது. கடுகுப் பத்துப் போட்டிருந்தார்கள். அந்த எரிச்சல் வேறு. காலுக்குள், வெளியே – இரண்டு பக்கமும் எரிச்சல். அது பையப்பைய உயிரை அரித்துக் கொண்டிருந்தது என்று கடைசி மூன்று நாட்களுக்குமுன் தான் சந்தேகம் வந்தது எங்களுக்கு. ஏற்கனவே, மெலிந்து, துவண்ட அந்தப் பூஞ்சை உடல் எப்படி இந்த வதையைத் தாங்குகிறது, இன்னும் எத்தனை நாள் தாங்கும் என்று நாங்கள் கிலிக்கு ஆளாகி, அவரைவிட்டு அகன்று அப்பால் வந்தபோதெல்லாம், அவரைப் பற்றியே புலம்பிக் கொண்டிருந்தோம்.