22 July 2011

குறுங்கவிதைகள்

எதைப்பார்த்து குரைக்கிறது
என்பது தெரியும்வரை
பேயைப் பார்த்துக் குரைப்பதாய்
பேருக்கு சொல்லி வை

***

அம்மாவின் முகத்தில்
பெண்ணைத் தேடினால் காமம்
சிறுமியின் முகத்தில்
தாயைத் தேடினால் ஆன்மீகம்

***

தெரியாததைத்
தேடப்போய்
இருந்ததும்
தொலைந்தது

***

வீசாது போனால் 
காற்றில்லை

ஊறாது கிடந்தால்
ஊற்றில்லை

நாளை வராதெனில்
இன்று நேற்றில்லை

***

இருக்கை வேண்டுமென்பதற்காய்
பொறுக்க முடிவதில்லை

பொறுக்க இயலாதெனில்
இருக்கை கிடைப்பதில்லை

இருக்கை இல்லாமலும்
இருக்கமுடிவதில்லை

***

ஓடிக்கொண்டே இருந்தால்தான்
ஓடிக்கொண்டே இருக்க முடியும்

***

சுழலில் மாட்டிக் கொண்டிருப்பதை அறியாதவரை
சுழன்று கொண்டு இருப்பதில் துயரமில்லை

***

கழன்றுகொள்ளும் வரை
கழற்றிப்போட முடிவதில்லை

***

கழன்றுவிட்டால்
கழற்றிப் போடும்
மாட்டிக் கொள்ளும்
அவஸ்தை இல்லை

***

கூச்ச சுபாவிக்கு
ஒருநாளும்
கூரையைப் பிய்த்துக்கொண்டு
கொட்டப்போவதில்லை

நீச்ச சுபாவிக்கு
கூரையும் பிய்யாமல் கொட்டியிருக்கலாமே
என்கிற புலம்பலில்
ஒட்டப்போவதில்லை

***

ஊறாத காயைக்
குறைகூறாதே
காய் ஊறக் காத்திரு

***

விடாப்பிடியாய் இருந்துகொண்டே இரு
அகஸ்மாத்தாய் ஒருநாள் ஆளாகிவிடலாம்

***

கொள்ளிக்கட்டை
வேகுமா

***

மேற்கொள்ள இயலாதவற்றை
மேற்கோளாய்ச் சொல்லிவை

***

நகுலன் எழுதியிருந்தால்
கவிதையாகியிருக்கும்

***